கச்சத்தீவு திருவிழாவில் 4,454 இலங்கையர்கள்: இந்தியர்கள் புறக்கணிப்பு
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பமாகியுள்ள நிலையில் 4,454 இலங்கையர்கள் பங்கேற்றதுடன், இந்தியர்கள் திருவிழாவை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (23) கொடியேற்றத்துடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாஆரம்பமாகிய நிலையில் வழமை போல் இலங்கையர்கள் பலரும் பங்கேற்றுள்ள நிலையில் இந்தியர்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில், சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.
திருவிழா திருப்பலி
வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்த திருவிழாவில் இலங்கையில் இருந்து 4,454 பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் இந்திய பக்தர்கள் கடற்தொழிலாளர்களின் விடுதலையை வலியுறுத்தி எவரும் வருகை தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார வசதிகள்
திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திருவிழாவில் கடற்படை உயர் அதிகாரிகள், அதிபரின் செயலாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |