இந்தியாவுடனான மோதல்! மாலைதீவு அதிபர் மொஹமட் முய்சுவுக்கு எதிராக குற்றப்பிரேரணை
மாலைதீவு அதிபர் மொஹமட் முய்சுவுக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் (28) மாலைதீவு நாடாளுமன்றில் ஏற்பட்ட மோதல் நிலைமைகளின் பின்னரே அதிபருக்கு எதிரான குற்றப்பிரேரணை முன்மொழியப்பட்டுள்ளது.
மாலைதீவு அதிபர் மொஹமட் முய்சுவின் அமைச்சரவையில் நான்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பில் மாலைதீவு நாடாளுமன்றத்தில் மோதல்கள் வெடித்தன.
இந்தியாவிற்கு எதிரான கருத்து
மாலைதீவில், மொஹமட் முய்சுவின் அரசு சீன சார்புள்ளதாக காணப்படுகின்ற அதேவேளை, மாலைதீவின் எதிர்க்கட்சி இந்தியாவுக்கு ஆதரவானதாக காணப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை மொஹமட் முய்சு தெரிவித்து வரும் நிலையில், மாலைதீவுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான உறவுகளில் விரிசல் அதிகரித்து வருகின்றது.
இவ்வாறு இந்தியாவுடனான உறவு மோசமடைந்து வருவதாக முய்சு அரசை மாலைதீவு எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.
கைகலப்பு ஏற்பட்டுள்ளது
இந்த வேறுபாடுகள் மிகவும் வளர்ந்ததால், முய்சு அரசின் ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையிலேயே மாலைதீவின் அதிபர் மொஹமட் முய்சுவுக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.