இறுகும் பிடி : கெஹெலியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது குற்றப்பத்திரிகை
புதிய இணைப்பு
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தரமற்ற தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (16) உத்தரவிட்டது.
அதன்படி, ஒவ்வொரு பிரதிவாதியும் தலா 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட உள்ளனர்.
பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதைத் தடை செய்த நீதிமன்றம், அவர்களின் கடவுச்சீட்டுக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது.
பிரதிவாதிகளுக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டது. பின்னர், பிரதிவாதிகளை பிணையில் விடுவிப்பதை சட்டமா அதிபர் எதிர்ப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன் பின்னர், பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்கக் கோரி அவர்களின் சட்டத்தரணிகள் நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த நீதிபதிகள் மகேஷ் வீரமன், பிரதீப் அபேரத்ன மற்றும் அமலி ரணவீர ஆகியோரை உள்ளடக்கிய மேல் நீதிமன்ற அமர்வு, சட்டமா அதிபரின் கோரிக்கையை நிராகரித்து இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(keheliya rambukwella) உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வில் இன்று (16) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கிடைக்குமா பிணை…!
குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, இந்த பிரதிவாதிகளை பிணையில் விடுவிப்பதை சட்டமா அதிபர் எதிர்ப்பார் என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, பிரதிவாதிகளின் பிணை கோரிக்கை தொடர்பாக அவர்கள் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகள் தங்களின் வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
