இந்திய - இலங்கை ஒப்பந்த நடைமுறைச் சிக்கல் - தமிழகத்தில் வலுக்கும் அழுத்தம்
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக 13ஆவது திருத்தம் அடிப்படையில் மாகாண சபைகள் வாயிலாக முழுமையான அதிகார பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்துமாறு தமிழக தலைவர்கள் மூலமாக மாநில ஒன்றிய அரசுகளை கோரும் விசேட செய்தியாளர் சந்திப்பு நாளை(6) இடம்பெறவுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் (எம்.பி) தலைமையில், இலங்கையின் வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் உயர்மட்ட பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், எனப் பலரும் இணைந்து நடத்தும் இந்தச் செய்தியாளர் சந்திப்பு நாளை முற்பகல் 11 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்திய - இலங்கை ஒப்பந்தம்
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக 1987 இல் கைச்சாத்திப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் 13ஆவது திருத்தச் சட்டம் அடிப்படையில் மாகாண சபைகளின் ஊடாக முழுமையான அதிகாரப் பரவலாக்கம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஒப்பந்தத்தின் பிரகாரம் முழுமையான செயலாக்க நடைமுறைகளில் அனாவசியமான தாமதங்களும் தடைகளும் நீடிக்கின்றன.
எனவே இரு நாடுகளின் அரச தலைவர்களும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழக அரசியல் கட்சிகளூடாக கோரிக்கைகளை முன்வைக்க வேண்டியுள்ள நிலையில், இந்தச் செய்தியாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்தச் செய்தியாளர் சந்திப்புக்கு ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களை இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.