நீதிமன்ற உத்தரவை மீறி சூலம் உடைப்பு! சுமந்திரன் வெளியிட்டுள்ள தகவல்
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் அமைச்சருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்ற பிரத்தியோக ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவிக்கையில், குருந்தூர் மலையில் உள்ள சூலம் உடைக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், சாள்ஸ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதற்கு பிறகு து.ரவிகரன் பொலிஸிலே முறைப்பாடு செய்திருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து நேற்றையதினம் பொலிஸாருடன் சென்று உடைக்கப்பட்ட தடையங்ளை காண்பித்திருக்கிறார். ஆகவே அங்கே இருந்தது உடைக்கப்பட்டது என்பது ஊர்ஜிதமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அல்லது மேன்மறையீட்டு நீதிமன்றத்திலே வழக்கு ஒன்றினை நாங்கள் தாக்கல் செய்ய இருக்கின்றோம்.
ஏற்கனவே முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்ட உத்தரவை மீறி அவ்வுத்தரவிற்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு ஒன்றினை நாங்கள் உடனடியாக மேல்முறையீட்டு நீதிமன்றத்திலே தாக்கல் செய்வோம்.
அது அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிற்கும் அவரோடு சேர்ந்தவர்களிற்கும் எதிராகவே இருக்கும் என அவர் தெரிவித்தார்.