தெற்கில் கைப்பற்றிய போதைப்பொருட்கள்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு
தெற்கு கடற்பரப்பில் அண்மையில் கைப்பற்றப்பட்ட பாரியளவு போதைப்பொருள் தொகையை இந்நாட்டிற்கு கடத்தியவர்கள் தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்து இந்நாட்டில் பாரியளவு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் தெவுந்தர பிரதேசத்தில் வசித்து வந்த செஹான் சத்சர அல்லது “தெஹிபால மல்லி” மற்றும் அவருடைய சகோதரரான துஷான் நெத்சர அல்லது “கலு மல்லி” ஆகியோர் தொடர்பில் இவ்வாறு சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாமறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு பயணத்தடை
அதன்படி, குறித்த சந்தேகநபர்கள் இருவருக்கும் வெளிநாட்டு பயணத்தடையை விதித்து கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
அண்மையில், தெற்கு கடலில் மிதந்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை மூலம் 839 கிலோகிராம் ஐஸ், ஹெராயின் மற்றும் ஹஷிஷ் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
தெஹிபால மல்லி மற்றும் களு மல்லி ஆகியோரால் குறித்த போதைப்பொருள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
இந்த சந்தேகநபர்கள் துபாய் அல்லது வேறு வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்து இந்த போதைப்பொருள் கடத்தலை நடத்தி வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஐவருக்கு விளக்கமறியல்
இந்நிலையில், இருவரின் தொலைபேசி பதிவுகளையும் வரவழைக்க உத்தரவு பிறப்பிக்குமாறு காவல்துறையினர் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து கடற்றொழிலாளர்களையும் நேற்று (21.10.2025) காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
அதன்படி, குறித்த சந்தேகநபர்களை எதிர்லவரும் நவம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
