“மஹிந்த ஒருபோதும் அப்படி கூறவே இல்லை” பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் வெளியிட்ட புதிய தகவல்
கோவிட் தொற்றுநோயால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார் என்ற தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா? என்று 'தி லீடர்' ஊடகம் குறித்த அதிகாரியிடம் விசாரித்துள்ளது. இதற்கு பதிலளித்த அவர், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம்.மரிக்கர் கேள்வி எழுப்பிய போது 'அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும்' என்று மட்டுமே பிரதமர் கூறினார்.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்று பிரதமர் எந்த வகையிலும் கூறவில்லை என்று அதிகாரி கூறினார்.
எனினும், கோவிட் தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதாக பிரதமர் அறிவித்துள்ளதாகவும், அதன்படி நாடாளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்ததாகவும் பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சடலங்களை அடக்கம் செய்ய அரசாங்கம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அவர் கூறினார்.
இருப்பினும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய பிரதமர் அனுமதித்ததாக ஊடகங்களில் வந்த செய்திகளைத் தொடர்ந்து, தீவிர சிங்கள பௌத்த குழுக்களும் சமூக ஊடகங்களும் பிரதமரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளன.
இதேவேளை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதித்ததற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு பாராட்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.