அம்பலாந்தோட்டை படுகொலை : வெளியான அதிர்ச்சி தகவல்கள்
அம்பலாந்தோட்டையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கொலைச் சம்பவம் அம்பலாந்தோட்டை - மாமடல பகுதியில் கடந்த 11.05.2026 ஆம் திகதி இரவு இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பின்னர், அவரது தலையை துண்டித்து தேவியின் சிலையில் வைத்து சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
முக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்
இவ்வாறு உயிரிழந்தவர், 34 வயதுடைய ‘பொடி’ என அழைக்கப்படும் லக்மால் சந்தருவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்த லக்மால் சந்தருவன் கடந்த பெப்ரவரி மாதம் மாமடல பகுதியில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபராக இருந்து, மார்ச் 30ஆம் திகதி பிணையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உயிரிழந்தவரின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற தினமே சமீர உதயங்க என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றைய இரு சந்தேகநபர்களும் பின்னர் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மதுபான வியாபாரம்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் சகோதரர் முன்னர் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கான பழிவாங்கும் நோக்கிலேயே இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக உயிரிழந்தவரின் குழுவினரால் கொல்லப்பட்ட ‘மெத்த பொடி’ என்பவர், தற்போது கைது செய்யப்பட்டுள்ள ‘மெத்த லொக்கு’வின் மூத்த சகோதரர் எனவும் தெரியவந்துள்ளது.
சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பான தகவல்களை காவல்துறைக்கு வழங்கியதாக ஏற்பட்ட சந்தேகமே இந்த மோதல்களின் அடிப்படை காரணமாக இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் தலையை துண்டித்து தேவியின் சிலையில் வைக்கும் திட்டம் தீட்டப்பட்டதாகவும், அதற்குப் பின்னணியில் ‘கருணா லொக்கா’ என அழைக்கப்படும் ரஞ்சித் பிரியந்த எதிரிவீர இருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலதிக விசாரணை
பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கருணா லொக்கா, சம்பவம் நடந்த தினமே தமக்கு எதிரான பிடியாணை காரணமாக நீதிமன்றத்தில் சரணடைந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதுவும் இந்தக் கொலை வழக்கிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |