இரும்பு மனிதனாய் சர்வதேசம் வரை தமிழரின் அநீதிகளை கொண்டு சென்றவர் ஆண்டகை!
இரும்பு மனிதனாய் இதய சுத்தியோடு இனத்தின் விடிவிற்காய் இறை பணியோடு இணைத்து இறுதி வரை போராடிய இறைவனின் அடியவரே, ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஆயரின் மறைவையடுத்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வெள்ளை ஆடையணிந்த புலியென எதிர்ப்பாளர்களினால் வர்ணிக்கப்பட்ட அஞ்சாத நெஞ்சன் இன்று அமைதியாய் துயில் கொள்கிறார்.
கம்பீரமான தோற்றம் கொண்டு சர்வதேசம் வரை எம் அநீதிகளை கொண்டு சென்ற ஆண்டகை, எந்த நேரமும் மக்கள் நலனை மட்டுமே சிந்தித்து போராடிய ஒரு தலை மகனை இன்று தேசம் இழந்துள்ளது. விடை காண முடியாத புதிராய் சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்ட நம் உரிமைக் குரலை ஒட்டு மொத்தமாய் முடக்கினர்.
இன மத பேதமின்றி நீதிக்காய் உழைத்த ஒரு உத்தமன். இன்று நிரந்தரமாய் துயில் கொள்கிறார். அவரின் கனவுகள் நிச்சயம் நிறைவேறும் அமைதியாய் உறங்குங்கள் தந்தையே என நாடாளுமன்ற உறுப்பினரின் இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.