மட்டக்களப்பு சிறைச்சாலையில் உயிரிழந்த கைதி : மரணத்திற்கான காரணம் வெளியானது
மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கைதி கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக இன்று (02) மட்டு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சோந்த 47 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா கடந்த 27 ஆம் திகதி கசிப்பு வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொக்கட்டிச்சோலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த நபர் கடந்த செவ்வாய்க்கிழமை (28) சிறைச்சாலையில் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மொட்டையான ஆயுதங்களால் தாக்கி
இதனையடுத்து குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் உத்தரவிட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் மொட்டையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாலேயே மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த கைதி, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்ற கைதிகளுடன் முரண்பட்டு அந்தக் குழுவினர் அவரைத் தாக்கியதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இலங்கையில் அண்மைக்காலமாக சிறைச்சாலைகளில் உயிரிழக்கும் கைதிகளின் மரணங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
