விளையாட்டுப் போட்டிக்கும் குழந்தையின் விநோத வேடத்திற்கும் விசாரணை…
செம்மணிப் புதைகுழிக்கு நீதி கேட்டு ஒரு முன்பள்ளிச் சிறுவன் அணிந்த விநோத உடை இப்போது காவல்துறை விசாரணைக்குரிய விடயமாக மாறியுள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கிலுள்ள சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழாவில், செம்மணியில் புதைக்கப்பட்ட குழந்தையின் துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறுவன் ஒருவர் வேடமணிந்து பங்கேற்றிருக்கிறான்.
“பல ஆண்டுகளுக்கு முன்னர் அம்மாவின் மார்பில் பால் அருந்திக்கொண்டிருந்தபோது என்னைப் புதைத்துவிட்டார்கள். எனக்கு நீதி கிடைக்குமா?” என்ற வாசகத்தைத் தாங்கியிருந்த அந்தச் சிறுவனின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் பரவியது.
அதனைத் தொடர்ந்து, சிறுவனின் பெற்றோரையும் முன்பள்ளி ஆசிரியையையும் மருதங்கேணிப் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
குழந்தைகளின் வெளிப்பாடு
ஒரு முன்பள்ளிச் சிறுவன் செம்மணிக்காக நீதி கேட்கும் நிலைக்கு வந்திருப்பதுதான் இந்த நாட்டில் ஈழத் தமிழ் சமூகத்தின் பெருந்துயரம். அத்துடன் குழந்தையின் உடையில் வெளிப்பட்டதை வெறும் விநோதக் காட்சியாக காவல்தறைத் தரப்பு பார்க்கவில்லை என்பதும் தெரிகின்றது.
புதைகுழிகளில் புதைக்கப்பட்ட உண்மைகளுக்கும் பதிலின்றித் தவிக்கும் குடும்பங்களுக்கும் நீதி கோரும் ஒரு சமூகத்தின் வலி. அந்தக் குரலை எப்படிப் புரிந்துகொள்வது என்பதற்குப் பதிலாக, அந்தக் குரல் எவ்வாறு உருவானது, யார் அதன் பின்னால் இருந்தார்கள் என்று விசாரணை நடத்தப்படும் சூழல் வடக்கு - கிழக்கில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் எந்த நிலையில் இருக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பி நிற்கிறது.
விளையாட்டுப் போட்டிகள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கான அவசியமான செயற்பாடு. விநோத உடைப் போட்டிகள் அவர்களின் கற்பனை, படைப்பாற்றல், சமூகத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கானவை.
குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைத் தமது மொழியில் வெளிப்படுத்துகிறார்கள். பெரியவர்கள் மறைக்க நினைக்கும் துயரங்களையும் அவர்கள் கேள்விகளாக முன்வைக்கிறார்கள்.
அத்தகைய வெளிப்பாடுகளை அரசியல் அச்சத்தின் வழியாகப் பார்க்கத் தொடங்கினால், குழந்தைகளின் இயல்பான சிந்தனையைக்கூடக் கண்காணிக்க வேண்டிய ஒன்றாக மாற்றிவிடுகிறோம் என்ற துயரமும் இங்கு வெளிப்படுகின்றது.
மாபெரும் மனிதப் புதைக்குழி
செம்மணிப் புதைகுழி என்பது ஒரு சாதாரண அரசியல் விவாதமல்ல. அங்கு மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான மனித எச்சங்கள், குழந்தைகளின் எச்சங்களும் அடையாளம் காணப்பட்டிருப்பது உட்பட, உண்மையைக் கண்டறிந்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை உலகுக்கு உணர்த்துகின்றன.
2026 ஆகஸ்டில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் முடிவடைந்தபோது 583 தொகுதி மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்ததாகச் செய்திகள் தெரிவித்தன.
அவற்றின் காலம், மரணத்துக்கான காரணங்கள், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட முக்கியமான கேள்விகளுக்கு உரிய அறிவியல் மற்றும் நீதிசார் விசாரணைகள் அவசியமாக உள்ளன.
இத்தகைய பின்னணியில் ஒரு சிறுவன் செம்மணியில் புதைக்கப்பட்ட குழந்தையின் துயரத்தைத் தனது உடையில் வெளிப்படுத்துவது ஏன் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்?
அந்தக் குழந்தையின் குரலை விசாரணைக்கு உட்படுத்துவதற்குப் பதிலாக, செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கிறதா என்ற கேள்விக்கு அதிகாரிகள் பதிலளிக்க வேண்டியிருக்கிறது.
சிறுவனின் பெற்றோரிடமும் ஆசிரியையிடமும் விசாரணை நடத்தப்பட்டிருப்பது குறித்த செய்தி, வடக்கு–கிழக்கில் மக்கள் தமது வரலாற்றையும் துயரங்களையும் வெளிப்படுத்துவதற்குக்கூட விளைவுகளை எதிர்கொள்ள வேண்டுமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
நினைவேந்தல்கள்மீதான அடக்குமுறை
இதனை தனித்த ஒரு நிகழ்வாகவும் பார்க்கப்பட முடியாது. நினைவேந்தல்கள், போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள், நில உரிமைக்கான எதிர்ப்புகள் எனத் தமிழர் தாயகத்தில் மக்களின் வெளிப்பாடுகள் பல்வேறு கண்காணிப்புகளையும் கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து முகம் கொடுத்து வருகின்றோம்.
செம்மணியில் நீதி கோரி நடத்தப்படும் போராட்டங்களிலும் காவல்துறை பிரசன்னம் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளன.
ஒரு சமூகத்தின் குழந்தைகள் தமது வரலாற்றைப் பேசுவதற்கும், தமது மண்ணில் நிகழ்ந்த துயரங்களைக் கேள்வியாக்குவதற்கும் அஞ்ச வேண்டிய நிலை உருவானால், அது அந்தச் சமூகத்தின் எதிர்காலத்தையே பாதிக்கும்.
பாடசாலைகளும் முன்பள்ளிகளும் குழந்தைகளின் சிந்தனை வளர வேண்டிய இடங்கள். அங்கு அவர்கள் வரலாற்றையும் மனித உரிமைகளையும் நீதியையும் பற்றி தமது கற்பனையில், தமது படைப்பாற்றலில், தமது மொழியில் பேசுவதற்கான இடமிருக்க வேண்டும்.
அதனைவிடுத்தக், குழந்தைகள் எழுப்பும் கேள்விகளைத் தண்டனையாலும் அச்சுறுத்தலாலும் மௌனமாக்குவது என்பத அவர்களின் சிந்தனை வளர்ச்சியை முடக்கிவிடுடுதலாகும்.
விசாரணைக்கு உள்ளாகும் விநோதம்
வடக்கு - கிழக்கில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், அவர்களின் ஒவ்வொரு வெளிப்பாடும் சந்தேகத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறதா?
விளையாட்டுப் போட்டியில் குழந்தை அணியும் உடை விசாரணைக்குரியதாக மாறுவதும், ஒரு நினைவேந்தல் கண்காணிக்கப்படுவதும், ஒரு போராட்டம் காவல்துறை பிரசன்னத்தால் சூழப்படுவதும், ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் குறித்த அடக்குமுறையின் வெளிப்படையான வெளிப்பாடுகளாகும்.
“எனக்கு நீதி கிடைக்குமா?” எனக் குழந்தையின் உடையில் எழுதப்பட்டிருந்த கேள்வியை விநோதமாக கடந்து செல்ல முடியாமல் இருப்பது என்பது பல செய்திகளை சொல்கிறது.
இன்றைய ஆட்சியும் அதன் காவல்துறை எந்திரமும் இதைத்தான் இந்த நடவடிக்கையின் வழியாக நமக்கு உணர்த்துகிறதா?
ஆனால் செம்மணியில் புதைக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவதும், குழந்தைகள் தமது வரலாற்றை அச்சமின்றிப் பேசக்கூடிய சூழலை உறுதிப்படுத்துவதுமே இன்றைக்கு மிக அவசியமானது என்பதை இத் தருணம் வலியுறுத்துகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 16 October, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.