“ஆளும் கட்சிக்குள் சுமுகமான தன்மை இல்லை” பங்காளிகள் அதிருப்தி
பங்காளிக் கட்சிகளுக்கும் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களுக்கும் இடையில் சுமுகமான தன்மை காணப்படாமல் இருப்பதே கூட்டணியின் கருத்து முரண்பாடுகளுக்கு பிரதான காரணம் என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara )தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சிக்குள் உக்கிரமடையும் உட்கட்சி மோதல் குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
அரசாங்கத்தில் கூட்டணி அமைத்துள்ள பங்காளிக் கட்சி தலைவர்களுக்கும், பிரதமருக்கும் இடையில் கடந்த காலங்களில் ஒவ்வொரு வாரமும் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் கூடவில்லை.
பங்காளிக் கட்சி தலைவர்களுக்கும், அரச தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு குறைவடைந்துள்ளால் சுமுகமான தன்மையினை பேண முடியாத தன்மை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் உள்ள அனைத்து பங்காளிக் கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து அரச தலைவர், பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்த்துள்ளோம்.
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் முழுமையாக செயற்படுத்தப்படவில்லை.அதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.
எதிர்வரும் காலப்பகுதியில் சிறந்த திட்டங்களை அமைத்து, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை செயற்படுத்துவது தொடர்பாக அரச தலைவர் மற்றும் பிரதமரிடம் விசேடமாக வலியுறுத்தவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.