சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வட்டி வீதத்தில் திருத்தம் : நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு
நாட்டிலுள்ள சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை திருத்துவதற்கான தீர்வு யோசனை அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (05) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “பல சிரேஷ்ட பிரஜைகளின் முக்கிய வருமானம், அவர்களின் ஓய்வு காலத்தின் போது வழங்கப்படும் பணிக்கொடை அல்லது வங்கி வைப்புத்தொகை போன்றவற்றில் பெறப்படும் நிலையான வட்டியே ஆகும்.
கடன் பெற்றவர்கள் கோரிக்கை
கடந்த காலங்களில் நாட்டில் வங்கி வட்டி வீதத்தை குறைக்குமாறு கடன் பெற்றவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர், அதற்கமைவாக வங்கி வட்டி வீதமும் பொதுவாக கடன் வட்டி வீதத்தை குறைக்கும் போது குறைவடைந்துள்ளது.
கடந்த காலங்களில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்ட போது அரசாங்கம் குறிப்பிட்ட சதவீத வட்டியை சேர்த்து சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கியது.
88 பில்லியன் ரூபாய்
அதன்படி, ஒருபுறம், வங்கிகளுக்கு 88 பில்லியன் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது, மறுபுறம், கிட்டத்தட்ட 15 இலட்சம் கணக்கு வைத்திருப்பவர்கள் வட்டி விகிதத்தைக் குறைப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
இந்த நேரத்தில், ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி இப்பிரச்சினைக்கு திறைசேரி வழங்கக்கூடிய பதில் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் சாதகமான பதில் வழங்கப்படும்“ என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |