இலங்கை மீதான சர்வதேச தலையீடு : சீனா போட்ட உத்தரவு
இலங்கைக்குள் தலையீடுகளை மேற்கொள்வதற்கான ஓர் ஆயுதமாக மனித உரிமை விவகாரத்தை பயன்படுத்துவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
இலங்கை கடுமையானதொரு அரசியல் கொந்தளிப்பில் மூழ்கிவரும் நிலையிலும் ராஜபக்ச அதிகார மையத்துக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையிலும் நேற்று ஐ.நா மனித உரிமைப்பேரவையில் இலங்கையை மையப்படுத்திய விவாதம் இடம்பெற்றது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையிடலை மையப்படுத்தியே நேற்றைய விவாதங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சீனாவின் பிரதிநிதி இவ்வாறு குறிப்பிட்டார்.
நேற்றைய விவாதத்தில் சீனாவின் பிரதிநிதி தெரிவித்தவை வருமாறு,
''குடும்ப உறவான இலங்கையில் அரசியல் ஸ்தீரத்தன்மை, தேசிய ஒருமைபாடு மற்றும் ஐக்கியம் ஆகியன பேணப்படுகின்றன.
இலங்கை அரசாங்கமானது செயற்றிறன்மிக்க வகையில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதுடன், அதனை பாதுகாக்கின்றது. நிலையான சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இலங்கை அடைந்துள்ளது.
நல்லிணக்கம் மற்றும் மீள் கட்டமைத்தல் உள்ளிட்ட விடயங்களில் இலங்கை அடைந்துள்ள முக்கியமான முன்னேற்றத்தை நாம் பாராட்டுகிறோம்.
அந்த வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 40 இன் கீழ் 1 தீர்மானம், பாரபட்சமற்ற தன்மையற்ற, தேர்ந்தெடுக்கப்படாத, அரசியல் மயப்படுத்தப்படாத குறிக்கோள்களுக்கு இசைவானதாக இல்லை.
இலங்கையின் இறையாண்மை மற்றும் அரசியல் சுயாதீனம் மற்றும் தேசிய நிலைமைகளுக்கு ஏற்பட அவர்களின் விருப்பத்திற்கேற்றவாறான மனித உரிமைகளின் முன்னேற்றம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு மதிப்பளிக்க வேண்டும்.
மனித உரிமை நிலைமைகளை அரசியல் மயமாக்குவதையும், மனித உரிமை விடயங்களை வைத்து உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும் தடுப்பதற்கு இலங்கையுடன் காத்திரமான பேச்சுக்கள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்குவோம்” என்றார்.
