ஐந்து மாதங்களில் அதிகரித்த இணைய மோசடிகள் : நூறுக்கு மேற்பட்டோர் கைது
இலங்கையில் இந்த ஆண்டின் கடந்த 5 மாதங்களில் இணைய மோசடி தொடர்பாக 1,093 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், சமூக ஊடகங்கள் தொடர்பில் 7,916 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுணுகல (Charuga Damunugala) குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இணையத்தை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 167 வெளிநாட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறைப்பாடுகள்
இணையமோசடி குறித்த மிக அண்மைய சம்பவம் கடந்த மாதம் (28.06.2024) திகதி நீர்கொழும்பில் (Negombo) பதிவாகியுள்ளது.
இதன்போது, 30 சீன (China) பிரஜைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் (Criminal Investigation Department) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த சருக தமுணுகல, இரண்டு மாதங்களுக்குள் சிறுவர்களை தவறான முறைக்குட்படுத்தியது தொடர்பில் 27 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குறித்த முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |