கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: வெளிநாட்டு சந்தேகநபர்களுக்கு இன்டர்போல் எச்சரிக்கை!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் “கணேமுல்ல சஞ்சீவ” கொலையில் பிரதானமாக செயற்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல முக்கிய சந்தேகநபர்கள் தற்போது வெளிநாட்டில் பதுங்கியுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் “கணேமுல்ல சஞ்சீவ” கொலை தொடர்பான வழக்கு நேற்று (09.01.2026) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த விசாரணைகளின் போதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.
தடுப்புக்காவல்
குறித்த கொலையில் நேரடியாக செயற்பட்டதாக சந்தேகிக்கப்படும் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காக தங்குமிடம் மற்றும் வசதிகளை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 34 ஆவது சந்தேகநபர் நந்தகுமார் தக்ஷி எனவும் இதன்போது வெளிப்படுத்தப்பட்டது.

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அதன்படி, கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் தற்போது வரை கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களையும் ஜனவரி 23 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க நீதிபதி நேற்று (09.01.2026) உத்தரவிட்டார்.
இதேவேளை, டுபாய் மற்றும் இந்தியாவிலிருந்து செயல்படும் குற்றவாளிகளால் ஒப்பந்த அடிப்படையில் இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி வழங்கிய வலையமைப்பு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு மேலும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |