இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தல் உக்கிரமடையும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான நோக்கம் ஆட்சிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டதா? என்ற சந்தேகம் வலுப்பெற்றுவரும் நிலையில் ஞானசார தேரரை பிரஸ்தாப குழுவுக்கு தலைவராக நியமித்திருப்பது இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தலை மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
அரசாங்கத்தின் மீது நாட்டு மக்களின் செல்வாக்கு சரிந்து வருதால் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு இவ்வாறான கீழ்த்தரமான அணுகுமுறைகள் கையாளப்பட்டு வருவதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) தெரிவித்துள்ளார்.
ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோஷத்தை நடைமுறைப்படுத்துவதற்கு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரச தலைவரால் நியமிக்கப்பட்ட செயலணிக்கு ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றவாளியாக தண்டனை விதிக்கப்பட்டு, சிறைவாசம் அனுபவித்தவரும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அரச தலைவர் விசாரணை ஆணைக்குழுவினால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டவருமான பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களிடம் அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன முறுகலை தொடர்ச்சியாக தோற்றுவித்து, வன்செயல்களைத் தூண்டி வரும் ஞானசார தேரர், குறிப்பாக இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும், அல்லாஹ்வையும் பகிரங்கமாகவே நிந்தித்து வருவதுடன், பொதுவாக பௌத்தம் தவிர்ந்த ஏனைய சமயங்கள் மீது பகிரங்கமாக தமது வெறுப்புணர்வை கொட்டித் தீர்த்து வருகின்றார் எனவும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து, அதன் செல்வாக்கு சரிந்து வரும் காரணத்தினால், அரசாங்கத்தின் பலவீனத்தை மூடிமறைப்பதற்கும் மக்களின் கவனத்தை வேறு திசையில் திருப்புவதற்கும் இவ்வாறான கீழ்த்தரமான அணுகுமுறைகள் கையாளப்பட்டு வருவது கண்கூடாக புலப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் குறுகிய நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கையானது முஸ்லிம் நாடுகள் மத்தியிலும், பொதுவாக சமாதானத்தை விரும்பும் உலக நாடுகள் மத்தியிலும் இலங்கை ஏற்கனவே வெறுப்பை சம்பாதித்துள்ள நிலையில், நாட்டின் நற்பெயருக்கு பாரிய களங்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா
