லசந்த படுகொலை விசாரணையைத் திசைதிருப்ப பலிக்கடாக்களாக்கப்பட்ட வவுனியா இளைஞர்கள்
மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கில், வவுனியாவைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதாக புதிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான பின்னணிகள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடலில், அவரது கொலைக்கான உண்மையான பின்னணியை மறைப்பதற்கும் விசாரணையை வேறு திசைக்கு மாற்றுவதற்கும் மேலும் சில கொலைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
அவற்றில் வவுனியாவைச் சேர்ந்த இரு இளைஞர்களின் படுகொலையும் ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது.
சாதாரண குடும்பப் பின்னணி
லசந்த விக்ரமதுங்கவின் மனைவி ரெய்ன் விக்ரமதுங்க ஆங்கிலத்தில் எழுதிய Unbowed and Unafraid என்ற சுயசரிதையின் சிங்கள மொழிபெயர்ப்பு தொடர்பான கலந்துரையாடலின்போதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வவுனியாவைச் சேர்ந்த குறித்த இரு இளைஞர்களுக்கும் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கும் எந்தவிதமான தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை.
அவர்கள் மிகவும் சாதாரண குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்கள். லசந்த விக்ரமதுங்க யார் என்பதுகூட அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியாது.
இதனால், லசந்த படுகொலையின் உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காணும் விசாரணையைத் திசைதிருப்புவதற்காகவே அந்த இளைஞர்கள் இலக்காக்கப்பட்டனரா என்ற கேள்வி எழுகிறது.
இந்தக் கொலைச் சம்பவங்களில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிம் அட்டைகள், நுவரெலியாவைச் சேர்ந்த பிச்ச தேவ சுதாசன் என்பவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பெறப்பட்டிருந்தது.
இதுவும் குற்றச்சம்பவங்களின் பின்னணியில் திட்டமிட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் முக்கிய அம்சமாகும். லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்த விவகாரமும் பல கேள்விகளை எழுப்புகிறது.
அப்போதைய காவல்துறைமா அதிபர், குறிப்பிட்ட ஒரு மரத்தின் அடியில் மோட்டார் சைக்கிளைத் தேடிப் பார்க்குமாறு புலனாய்வாளர்களுக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டது.
மோட்டார் சைக்கிள் தொடர்பான தகவல்
குறிப்பாக, அந்த இடத்தைச் சோதனையிடுவதற்கான உத்தியோகபூர்வ கடிதம் கிடைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே, குறிப்பிட்ட மரத்தின் அடியில் தேடுமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விடயம், மோட்டார் சைக்கிள் தொடர்பான தகவல் அதிகாரிகளுக்கு எவ்வாறு முன்கூட்டியே கிடைத்தது?
வவுனியா இளைஞர்களின் படுகொலை, சிம் அட்டைகளின் பயன்பாடு மற்றும் மோட்டார் சைக்கிள் தொடர்பான சம்பவங்கள் ஆகிய அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும்போது, லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையின் உண்மையான பின்னணியை மறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |