மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒலிம்பிக்கில் தடை!
ஒலிம்பிக் போட்டிகளில் பெண் வீராங்கனைகளுக்கான பிரிவில் பங்கேற்பதற்கு உயிரியல் ரீதியாகப் பெண் என்பதை உறுதிப்படுத்தும் மரபணு சோதனை (SRY gene test) இனி கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பைச் சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று (26-03-2026) வெளியாகியுள்ள இந்தத் தீர்மானத்தின்படி 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் (LA2028) ஒலிம்பிக் முதல் மூன்றாம் பாலினத்தவர்கள் பெண் பிரிவில் போட்டியிடுவது முற்றுமுழுதாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
சமமான போட்டி
ஆண்களுக்கான உடல் வளர்ச்சியைப் பெற்றவர்கள் பெண் பிரிவில் போட்டியிடுவது சமமான போட்டியாக இருக்காது மற்றும் அது பாதுகாப்பற்றது என IOC தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரி விளக்கம் அளித்துள்ளார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் எழுந்த பாலின சர்ச்சைகளைத் தொடர்ந்து 18 மாத கால விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மனித உரிமை மற்றும் LGBTQ+ அமைப்புகள் இதற்குத் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
மூன்றாம் பாலினத்தவர்கள்
IOC இன் இந்த முடிவு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பெண்கள் விளையாட்டில் ஆண்களுக்கு இடமில்லை என்ற கொள்கைக்குப் பெரும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

ஏற்கனவே 2025 பெப்ரவரியில் அமெரிக்காவில் இதற்கான தடையை நடைமுறைப்படுத்திய ட்ரம்ப், LA2028 ஒலிம்பிக்கிலும் மூன்றாம் பாலினத்தவர்களை அனுமதிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளார்.
சர்வதேச அளவில் விளையாட்டுத்துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள இந்த விதிமுறை, பெண் வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |