இந்து சமுத்திர வலய மாநாடு நாளை ஆரம்பம்
இந்து சமுத்திர வலய மாநாடு எமது நாட்டில் நடத்த அனுமதி கிடைத்திருப்பது, நாட்டை மீட்பதற்கு அதிபர் எடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாடுகளின் வரவேற்பு உள்ளது என்பதனை நிருபிப்பதற்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகுமென, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகாகொத்தவில் நேற்று(09) இ்டம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கைக்கு கிடைத்துள்ள கௌரவம்
“இந்து சமுத்திர வலய மாநாடு புதன்கிழமை (11) எமது இலங்கையில் இடம்பெற இருக்கிறது.

இந்த மாநாட்டை எமது நாட்டில் நடத்த கிடைத்திருப்பது எமக்கு பெரும் கெளரவமாகும். அதேபோன்று அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு இந்து சமுத்திர வலய மாநாட்டின் தலைமை பதவி இலங்கைக்கு வழங்கப்பட இருக்கிறது.
தற்போது இம்மாநாட்டின் தலைமை பதவியை பங்களாதேஷ் வகித்து வருகிறது.
அத்துடன் இந்த மாநாட்டுக்கு வலயத்தில் இருக்கும் வெளிவிவகார அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொள்ள இருக்கின்றனர். அவர்கள் அதிபருடன் விசேட கலந்துரையாடல்கள் பல சுற்றுகளை நடத்த இருக்கின்றனர்.
இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மலேசிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வந்திருக்கிறார். அவுஸ்திரேலியா, இந்தியா, பங்களாதேஷ். ஈரான், ஓமான், இந்துனேசியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.” என்றார்.