ஹவுதி அமைப்புக்கு ஈரான் பகிர்ந்த செய்தியால் பதற்றம்! உலக நாடுகளுக்கு பேரிடி
அமெரிக்கா ஈரானிய மின்சார உள்கட்டமைப்பைத் தாக்கினால், செங்கடல் எண்ணெய் வழித்தடத்தை மூடத் தயாராக இருக்குமாறு யேமனின் ஹவுதி இயக்கத்தை ஈரான் கேட்டுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயமானது, உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு ஒரு சக்திவாய்ந்த புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திட்டம் குறித்து ஈரானின் தலைமைக்குள் விவாதிக்கப்பட்டு, பின்னர் அந்தச் செய்தி ஈரானின் கூட்டாளிகளான ஹவுதி அமைப்பினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ட்ரம்பின் அச்சுறுத்தல்
தெஹ்ரானின் இந்தக் கோரிக்கை குறித்து ஹவுதிகளுக்கு சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அது எவ்வாறு பகிரப்பட்டது என்பது குறித்தோ அல்லது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானிய மின்சார உள்கட்டமைப்பைத் தாக்குவதாக அச்சுறுத்தியதற்குப் பிறகுதான் இந்த செய்தி அனுப்பப்பட்டதா என்பது குறித்தோ மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில், செங்கடலின் நுழைவாயிலான பாப் எல்-மண்டேப் நீரிணைக்கு அருகிலுள்ள யேமனின் மலைப்பகுதிகளில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நிலைநிறுத்தி, கப்பல் போக்குவரத்தைத் தாக்குவதற்கான அனைத்து ஆயத்தங்களையும் ஹவுதி அமைப்பினர் ஆயத்தப்படுத்தியுள்ளதாக தாக்குதலைத் தொடங்குவதற்கான இறுதி உத்தரவுக்காக அவர்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது செங்கடல் பாதையும் மூடப்பட்டால் அது உலகளவில் பெரும் பொருளாதார மற்றும் எரிசக்தி பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |