அமெரிக்காவுக்கு எதிராக புதிய போர்முனைகள்! பகிரங்கமாக எச்சரிக்கும் ஈரான்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் மூன்றாவது வாரமாகத் தொடரும் நிலையில், ஈரான் அரசு அமெரிக்காவுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் உக்கிரமாக நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல் செய்யும் அனைத்து விடயங்களுக்கும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு கொடுத்தால் அமெரிக்காவிற்கு எதிராக புதிய போர்முனைகள் ஆரம்பிக்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுசைன் அமிரப்டொல்லாஹியன் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்கா ஏனைய நாடுகளை அமைதியாக இருக்க வேண்டும் எனக் கூறிவிட்டு, தான் மாத்திரம் இஸ்ரேல் மீதான வெளிப்படையான ஆதரவு நிலைப்பாட்டை காண்பித்து வருகிறது, அமெரிக்கா இதனை நிறுத்தாமல் தொடர்ந்து செய்யுமானால், அமெரிக்காவிற்கு எதிராகவும் போர் முனைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.
அமெரிக்கா தான்
காசா பகுதியில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் கொல்லப்படுவது மேலும் தொடர்ந்தால் நிலைமை கையை விட்டுச் செல்லும் அபாயம் ஏற்படும்.
இதனால் இந்தப் போர் இத்துடன் முடிவடைய வேண்டுமா அல்லது அது தீவிரம் அடைந்து மற்ற இடங்களுக்கும் பரவ வேண்டுமா என்பதை அமெரிக்கா தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிரியாவில் இருக்கும் ஈரான் குழுக்கள் சுதந்திரமாகச் செயற்படுபவை அவற்றிற்கும் எமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எங்களிடம் இருந்து அவர்களுக்கு எந்த உத்தரவுகளும் வழங்கப்படுவதுமில்லை, அவர்களின் தாக்குதலிற்கு அமெரிக்கா ஈரான் மீது குற்றம் சுமத்துவது தவறு என்றும் அவர் தெரிவித்தார்.
சிரியாவில் உள்ள ஈரான் படைகள் மீது அமெரிக்கா நேற்று (28) நடத்திய ட்ரோன் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டிருந்தார்.
இஸ்ரேல் சமீப காலமாக காசா மீது தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது, காசா மீதான படையெடுப்பை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் பின்னர் இது ஒரு பிராந்திய மோதலாக உருவெடுக்கும் என்றும் அது பிரச்சனைகளை அதிகரிக்குமேயன்றி குறைக்காது எனவும் அவர் எச்சரித்தார்.
அதேபோல் ஹமாஸ் வசம் அப்பாவி மக்கள் பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், இந்தப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து வரும் நாங்கள், ஈரானின் நலனைக் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயங்கமாட்டோம் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.