ஈரானில் 40 நாட்களை கடந்த தீவிர போராட்டங்கள் - பாதுகாப்பு தரப்பு அதிரடி நடவடிக்கை
ஈரானில் ஆறாவது வாரமாக அரச எதிர்ப்பு போராட்டங்கள் வலுவடைந்துவரும் நிலையில், அதனை அடக்கும் நடவடிக்கைகளை அந்நாட்டின் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டுள்ளனர்.
மாஷா அமினியின் உயிரிழப்பு ஏற்பட்டு 40 நாட்கள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் நாடாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், பலரை அந்நாட்டு காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
தீவிரமடைந்த போராட்டங்கள்
ஈரானில் காவல்துறையினரின் தடுப்பு காவலில் இருந்தபோது கடந்த மாதம் 16 ஆம் திகதி மாஷா அமினி என்ற குர்திஷ் பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
மாஷா அமினி உயிரிழப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பெண்கள், ஹிஜாப் ஆடைகளை எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், பாதுகாப்பு தரப்பினருடனும் முரண்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாஷா அமினி உயிரிழந்து, 40 நாட்கள் நிறைவடையும் நிலையில், இதுவரை இல்லாத வகையில் பாரிய அளவான ஆர்ப்பாட்டங்கள் ஈரானில் இடம்பெற்று வருகின்றன.
அடக்கும் நடவடிக்கை
குறிப்பாக தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஈரானிய சட்ட மருத்துவ ஸ்தாபனத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 வைத்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் பாதுகாப்பு தரப்பினரின் பதில் நடவடிக்கைகளில் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.