போர்நிறுத்தம் என்ற பேச்சிற்கே இடமில்லை : ஈரான் அறிவிப்பு
நடந்து வரும் போருக்கு மத்தியில் மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நிராகரித்தார். தனது நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக போராட்டத்தைத் தொடர்வது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
NBC இன் "Meet the Press" க்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக ஈரானியர்கள், பள்ளி மாணவிகளைக் கொல்வதுடன், மருத்துவமனைகளையும் கூட தாக்குகின்றன என்று அரக்சி கூறினார்.
போருக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை சண்டை நிறுத்தப்படாது
அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த ஆண்டு எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறியதை சுட்டிக்காட்டிய அவர், போருக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை சண்டை நிறுத்தப்படாது என்றார்.

ஈரானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே மிக நெருக்கமான ஒத்துழைப்பு இருப்பதாகவும், ரஷ்யா பல்வேறு துறைகளில் ஈரானுக்கு உதவி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும், அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் துருப்புக்களின் இருப்பிடங்கள் குறித்த உளவுத்துறை தகவல்களை ரஷ்யா ஈரானுக்கு வழங்கி வருவதாக வெளியான தகவல்கள் குறித்து அவர் தெளிவான அறிக்கையை வெளியிடவில்லை.
ஈரானின் ஏவுகணை வரம்பு
இது குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ், ஈரானுக்கு ரஷ்யாவின் ஆதரவு மிகவும் பயனுள்ளதாக இல்லை என்றும், அமெரிக்கப் படைகள் ஈரானின் வான், கடற்படை மற்றும் தரைப்படைகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் கூறினார்.

அமெரிக்காவை அடையக்கூடிய ஏவுகணைகள் ஈரானிடம் இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூற்று தவறானது என்று அராச்சி கூறினார். உலகிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக ஈரான் தனது ஏவுகணைகளின் வரம்பை 2,000 கிலோமீட்டராக வேண்டுமென்றே மட்டுப்படுத்தியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |