யுரேனியத்தின் ஒரு துகள் கூட கிடைக்காது: ட்ரம்பின் நிபந்தனைகளைத் தூக்கி எறிந்த ஈரான்
ஈரானிய அணுசக்தித் திட்டம் தொடர்பான விவகாரங்களில் வாஷிங்டன் தனது தீவிரமான கோரிக்கைகளைக் கைவிட மறுப்பதால் அமெரிக்க அதிகாரிகளுடன் புதிய சுற்று நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகளை நடத்த ஈரான் தயாராக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சயீத் காதிப்சாதே தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அணுசக்தித் துகள்கள்
மேலும் தெரிவித்த அவர், ஈரானிடமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானிலுள்ள அனைத்து அணுசக்தித் துகள்களையும் (Nuclear dust) பெறத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்திருந்த கருத்திற்குப் பதிலடியாக அமைச்சரின் இந்தக் கருத்து அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எந்தவொரு செறிவூட்டப்பட்ட யுரேனியப் பொருட்களும் அமெரிக்காவிற்கு அனுப்பப்படாது என்பதைத் தெளிவுபடுத்திய காதிப்சாதே, இது விவாதத்திற்கே இடமில்லாத ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது அணுசக்தித் திட்டம் குறித்த கவலைகளைத் தீர்க்க ஈரான் தயாராக இருக்கும் அதே வேளையில், தொடக்கத்திலேயே நிராகரிக்கப்பட வேண்டிய அமெரிக்காவின் தர்க்கமற்ற நிபந்தனைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |