பேச்சுவார்த்தையை நிறுத்திய ஈரான்! குழப்பத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை ஈரான் நிறுத்தி வைத்துள்ளதாக தனக்கு அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும், அவ்வாறு அவர்கள் மௌனம் காப்பதில் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக, அமெரிக்காவுடன் செய்திப் பரிமாற்றங்களை மேற்கொள்வதை ஈரான் நிறுத்திக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் அரை-அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
பொருளாதார முற்றுகை
அத்துடன், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக முடக்குவதற்கும், இதர முன்னணிப் பிரிவுகளை செயல்படுத்துவதற்கும் ஈரானும் அதன் நட்பு நாடுகளும் ஆலோசித்து வருவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ட்ரம்ப், "அவர்கள் அது பற்றி எங்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை. அதற்காக நாங்கள் அங்கு சென்று குண்டுகளை வீசத் தொடங்கப் போகிறோம் என்று அர்த்தமல்ல.நாங்கள் எங்களது பொருளாதார முற்றுகையைத் தொடர்ந்து நீடிப்போம்," என்று கூறியுள்ளார்.
லெபனானில் போர்நிறுத்தம்
இருப்பினும், பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டது குறித்து ஈரானிய அதிகாரப்பூர்வ தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதற்கு முன்னதாகக் கருத்துத் தெரிவித்திருந்த ஈரானிய வெளியுறவு அமைச்சர், அமெரிக்காவுடன் ஏதேனும் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு லெபனானில் முழுமையான போர்நிறுத்தம் ஏற்படுவது ஒரு "முக்கிய நிபந்தனை" என்று வலியுறுத்தியிருந்தார்.
மேலும், அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் மீறல் ஏற்பட்டால், அது "அனைத்து முனைகளிலும்" ஏற்பட்ட மீறலாகவே கருதப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |