சவுதியின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை! ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கை
பாதுகாப்பிற்காக மற்றவர்களிடம் கெஞ்ச வேண்டிய நிலை வராதவாறு உங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுங்கள் என சவூதி அரேபியாவுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் சவூதி அரேபியா புதிதாகக் கையெழுத்திட்ட பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த நிலைப்பாட்டில் ஈரான் தனது முதல் எதிர்வினையை இவ்வாறு வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் அந்நாட்டின் பாதுகாப்பிற்கு ஒருபோதும் உத்தரவாதம் அளிக்காது என்று ஈரான் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
அமெரிக்கர்களை சார்ந்திருந்த பாதுகாப்பு
விடயம் குறித்து கருத்து வெளியிட்ட ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி,

"பல தசாப்தங்களாக அமெரிக்கர்களை ஒருதலைப்பட்சமாகச் சார்ந்திருந்தது பாதுகாப்பைத் தரத் தவறியதைப் போலவே, துருக்கி மற்றும் பாகிஸ்தானுடனான ஒரு காகித ஒப்பந்தம் தங்களுக்குப் பாதுகாப்பைத் தராது என்பதை சவூதியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்," என்று வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.
ஈராக் மற்றும் யேமனில் உள்ள, ஈரான் ஆதரவு பெற்ற தாக்குதல் குழுக்கள், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் ஆதரவுடன் ஒரு பெரிய, ஒருங்கிணைந்த தாக்குதலை சவூதி அரேபியா மீது நடத்துவதற்கு தயாராகி வருவதாக வெளியாகிய தகவலை அடுத்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எனவே, சவூதி அரேபியா மீதான ஒரு பெரிய தாக்குதலின் விளைவுகள் குறித்து தெஹ்ரானுக்கு இந்த ஒப்பந்தம் ஒரு எச்சரிக்கையாக அமையக்கூடும்.
ஏனெனில் அந்தத் தாக்குதல் இப்போது பாகிஸ்தான் மற்றும் துருக்கியையும் உள்ளிழுத்து, போரை வியத்தகு முறையில் விரிவுபடுத்தும் என நம்பப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |