கடலில் சிக்கியுள்ள ஈரானிய கப்பல்கள் : உதவி கோரிக்கையை அடியோடு நிராகரித்தது இலங்கை
இலங்கை கடல் எல்லையில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குமாறு ஈரான் அரசு விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளதாக ஆங்கிள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட கப்பல்களுக்கு அத்தகைய விநியோக சேவைகளை வழங்க முன்வந்தால், நாட்டின் தனியார் துறை நிறுவனங்கள் அமெரிக்காவின் இரண்டாம் நிலைத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
15 ஈரானியக் கப்பல்கள்
குறித்த நாளிதழுக்கு அளித்த ஒரு சிறப்பு கலந்துரையாடலில், தற்போது இலங்கை கடல் எல்லைக்கு வெளியே நங்கூரமிட்டுள்ள 47 வெளிநாட்டுக் கப்பல்களில், 15 கப்பல்கள் குறிப்பாக ஈரானியக் கப்பல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை இலக்காகக் கொண்ட அமெரிக்கக் கடற்படையின் புதுப்பிக்கப்பட்ட முற்றுகையின் காரணமாக, கேள்விக்குட்பட்ட ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்கள் கடந்த சில மாதங்களாக இலங்கை கடல் எல்லைக்கு வெளியே தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதையும் வழங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை
மேலும், கப்பல்கள் இலங்கை கடல் எல்லைக்கு வெளியே இருப்பதால், அவற்றுக்கு எந்தப் பொருட்களையும் வழங்க இலங்கை அரசாங்கம் சட்டப்படி கடமைப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கேள்விக்குட்பட்ட கப்பல்களுக்கு நீர் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குமாறு ஈரானிய அதிகாரிகள் இலங்கையிடம் அதிகாரபூர்வமாகக் கோரியிருந்ததை உறுதிப்படுத்திய அமைச்சர், "ஒரு அரசாங்கமாக, நாங்கள் இதுவரை அந்த ஈரானிய கப்பல்களுக்கு எதையும் வழங்கவில்லை. எதிர்காலத்திலும் எதையும் வழங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை," என்று கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |