பெல்ஜிய யூத இலக்குகள் மீதான தாக்குதலில் ஈரானின் தொடர்பு! பாதுகாப்பு தரப்புகள் பகிரங்கம்
பெல்ஜியத்தின் லீஜ் மற்றும் ஆண்ட்வெர்ப் நகரங்களில் யூத சமூகத்தை இலக்காகக் கொண்டு மார்ச் மாதத்தில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு ஈரானுடன் தொடர்புடைய குழுக்கள் பின்னணியில் இருந்திருக்கலாம் என பெல்ஜிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெல்ஜிய அச்சுறுத்தல் பகுப்பாய்வு ஒருங்கிணைப்பு பிரிவின் (CUTA) பணிப்பாளர் கெர்ட் வெர்காட்டரன், அண்மையில் வழங்கிய பேட்டியில், இந்தச் சம்பவங்கள் ஈரானுக்கு ஆதரவான குழுக்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தார்.
மேலும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு சிறார்கள் கைது
மார்ச் 9ஆம் திகதி லீஜ் நகரில் உள்ள யூதர்களின் வழிபாட்டுத் தலத்திற்கு வெளியே வெடிப்பு இடம்பெற்றிருந்த நிலையில், மார்ச் 23ஆம் திகதி ஆண்ட்வெர்ப் நகரின் யூதர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

ஆண்ட்வெர்ப் சம்பவம் தொடர்பாக இரண்டு சிறார்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலுக்கு ஒரு குழு பொறுப்பேற்றிருந்தாலும், அதன் உரிமைகோரல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஐரோப்பாவில் யூத சமூகங்கள் மற்றும் இஸ்ரேல் தொடர்பான இலக்குகள் மீது இடம்பெற்ற அண்மைய தாக்குதல்களுக்கு ஈரானிய பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் இருப்பதாக பெல்ஜியம் உள்ளிட்ட 24 நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களின் பின்னணி மற்றும் தாக்குதல்களுக்கிடையிலான தொடர்புகள் குறித்து பெல்ஜிய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |