தமிழ்த் தேசிய அரசியலின் துணிச்சலான குரல் ஓய்ந்தது! சிவாஜிலிங்கம் நள்ளிரவு காலமானார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் (வயது 69) நேற்று சனிக்கிழமை நள்ளிரவு காலமானார்.
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்திருந்த அவர், அண்மைக்காலமாக உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சனிக்கிழமை இரவு 11.50 மணியளவில் தனது வல்வெட்டித்துறை இல்லத்தில் உயிரிழந்தார்.
வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் களத்தில் நீண்டகால அனுபவம் கொண்ட சிரேஷ்ட அரசியல்வாதியான எம்.கே.சிவாஜிலிங்கம், இராணுவம்,காவல்துறை மற்றும் இராணுவத்தின் ஆதரவுடன் இயங்கிய ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களுக்கு இலக்காகியும் எதற்கும் அஞ்சாது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களிலும் அரசியல் செயற்பாடுகளிலும் தீவிரமாகப் பங்காற்றியவர் ஆவார்.
2009ஆம் ஆண்டு தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், இராணுவத்தினர், காவல்துறை மற்றும் அரச புலனாய்வாளர்களின் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் நிகழ்வுகளைத் துணிவுடன் முன்னின்று நடத்தி வந்த பெருமை இவரையே சாரும்.
ரெலோ அமைப்பின் மூத்த உறுப்பினராக இருந்த இவர், 2001 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டி நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றினார்.
ரெலோ கட்சியிலிருந்து விலகித் தமிழ்த் தேசியக் கட்சியில் பொதுச்செயலாளராகப் பதவி வகித்த அவர், இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் வல்வெட்டித்துறை நகர சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு, தவிசாளராகப் பொறுப்பு வகித்து நகர அபிவிருத்தி மற்றும் நிர்வாகப் பணிகளை முன்னெடுத்து வந்தார்.
அன்னாரது மறைவுக்குத் ஐ.பி.சி தமிழ் ஊடகம் இரங்கல்களை தெரிவிப்பதோடு தமிழ் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.