இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலியை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகள்
எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் சிரமதானப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
தமிழ் மக்களது சுபீட்சமான வாழ்வுக்காக தங்களது இன்னுயிர்களை ஈக்கம் செய்த மாவீரர்களை போற்றி வணங்குகின்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறையும் நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது.
அந்த வகையிலே மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்காக தமிழர் தாயக பகுதிகளில் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட வருகின்றன.
உறவுகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
அந்த வகையில் இன்று (06) மாலை வேளையில் 2009 ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உருவாக்கப்பட்ட இரட்டை வாய்க்கால் துயிலும் இல்லத்தில், பணிக்குழு மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் இணைந்து அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றன.

வழமை போன்று இம்முறையும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக இடம் பெறும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பணிக்குழு தங்களை தயார் படுத்தி வருவதாகவும் எனவே தொடர்ச்சியாக இடம்பெறும் சிரமதான பணிகள் ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு பணிக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |