தொல்லியல் திணைக்களத்தின் இனவாத நகர்வு! தமிழரசு தரப்பு குற்றச்சாட்டு
மட்டக்களப்பில் தொல்லியல் திணைக்களம் அவசர அவசரமாக பெயர் பலகைகளை நாட்டி பௌத்த இனவாதிகளுக்கு துணை போகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்து தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் பௌத்த இனவாத சிந்தனைகள் மீண்டும் பூதாகரமாக மாறி சிறுபான்மை மக்களின் இடங்களை ஆக்கிரமித்து வரும் நிலையில் இவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகியுள்ளமை பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை குறிவைத்து தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகளை அகற்றியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிங்களமயமாக்கல்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த நாட்டில் யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர். கடந்த 16 வருடங்களாக வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்கள் மீது மிக மோசமான இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த நாட்டில் உள்ள பௌத்த இனவாதக் குழுக்கள், பௌத்த இனவாத அரசியல் தலைவர்கள் வடகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் பாரம்பரிய காணிகளை ஆக்கிரமித்து சிங்களமயமாக்கும் நோக்குடன் பல அரச திணைக்களங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் மகாவலி அபிவிருத்தித் திணைக்களம், வன இலக்கா, தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட பல திணைக்களங்கள் ஊடாக தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுகிறது.
இதில் மிக முக்கியமான சட்ட ரீதியான திணைக்களமாக தொல்லியல் திணைக்களத்தை இனவாத பௌத்த ஆக்கிரமிப்பாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
திருகோணமலை புத்தர் சிலை
இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசின் ஆட்சியில் இது போன்ற பௌத்த பேரினவாதிகளின் ஆக்கிரமிப்புகள் நடைபெறாது. சட்டம் அனைவருக்கும் சமமாக செயற்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரத்தில் அரசினால் இனவாத சக்திகளை கட்டுப்படுத்த முடியாமல் போனதோடு குறித்த சம்பவம் சிறுபான்மை மக்கள் மீது ஒரு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
அத்தோடு கடந்த 21 ஆம் திகதி இந்த நாட்டில் மீண்டும் பௌத்த இனவாத அரசியலை முன்னெடுக்கும் வகையிலான பேரணிகள் நடாத்தப்பட்டு அதில் சிங்கள பௌத்த பேரினவாத அரச தலைவர்கள் மிக மோசமான பௌத்த பேரினவாத பிரசாரத்தை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில் வடகிழக்கில் உள்ள சிறுபான்மை சமூகம் மீண்டும் தங்கள் மீது இனவாதத்தை திணித்து தமக்கு எதிரான வன்முறைகளை பௌத்த பேரினவாதிகள் கட்டவிழ்த்து விடுவார்களோ என்ற அச்சத்தோடு இருக்கும் சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அவசர அவசரமாக தொல்லியல் திணைக்களம் தமிழர்களின் பாரம்பரிய இடங்களை தொல்லியல் இடமாக அடையாளப்படுத்தி பெயர் பலகைகளை நாட்டிச் சென்றுள்ளனர்.
தொல்லியல் திணைக்களம்
2023 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தரவுகளின் படி வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய நாட்டின் தொல்லியல் இடங்களை பாதுகாக்கும் சட்டத்திற்கு அமைய மேற்படி பெயர் பலகைகள் நடப்பட்டதாக தொல்லியல் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்திருந்திருந்தார்.

எனினும், நாட்டில் மீண்டும் பௌத்த இனவாத அரசியல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு அறிவிக்காமல் மாநகர மேயர் மற்றும் தவிசாளர்களுடன், கலந்தாலோசிக்காமல் மிகவும் அவசர அவசரமாக இவ்வாறு பெயர் பலகைகளை நாட்டியத்தில் உள்நோக்கம் உள்ளது.
இது 21 ஆம் திகதி ஒன்று கூடிய பௌத்த பேரினவாத அரசியல் தலைவர்களை திருப்திப்படுத்தவும், அவர்களது நிகழ்சி நிரலை வடகிழக்கில் அமுல்படுத்தும் நோக்கோடு தொல்லியல் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர், அதிகாரிகளால் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையா? என்ற சந்தேகம் எழுகிறது.
தொல்லியல் திணைக்களத்தினால் போடப்பட்ட பெயர் பலகைகள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் மிகப்பெரிய விமர்சனம் எழுந்ததோடு, ஏன் குறித்த இடங்களில் பெயர் பலகை வைத்தார்கள், அதற்கான காரணங்களை அறியாத நிலையில் மேற்படி இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படப்போகிறது என்ற அச்சத்தின் பிரகாரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளிடம் குறித்த பெயர் பலகைகளை அகற்றுமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் பிரதேச சபை தவிசாளர்கள் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி குறித்த சில பெயர் பலகைகளை அகற்றி இருந்தனர். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக தொல்லியல் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தொல்லியல் திணைக்களம் மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் தங்களது செயற்பாட்டை முன்னெடுக்கும் போது அதுவும் இன, மத ரீதியான முரண்பாடுகளை, வன்முறைகளை தோற்றுவிக்கும் உணர்வு பூர்வமான இடங்களில் யாருக்கும் தெரியப்படுத்தாமல் எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி பெயர் பலகைகளை வைத்து விட்டு செல்வது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்.
தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப் படுத்தப்பட்ட இடங்களுக்கு பௌத்த பேரினவாத மதவாத குழுக்கள், வருகை தந்தால் அந்த இடத்தில் இன ரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? எனவே சூழ்நிலைகளை அறிந்து சிறுபான்மை இன மக்களின் சந்தேகங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சங்களுக்கு தொல்லியல் திணைக்களமும், அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டும்.
தவிசாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதை விடுத்து தவிசாளர்களுடன் பேசி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அத்தோடு மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |