பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதில் மோதல்! கிராமத்தையே தனிமைப்படுத்த உத்தரவு
கொரோனா தொற்றாளருடன் தொடர்பிலிருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்ய அதிகாரிகள் சென்ற போது கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் முழு கிராமத்தையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் குமார் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கேகாலை பொது சந்தையில் கடை நடத்தி வந்த சியம்பலாபிட்டி பகுதியில் வசிக்கும் நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்தார்.
இதையடுத்து இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 18 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.
தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த நிலையில் கேகாலை சுகாதார பிரிவு பிராந்திய மருத்துவ அலுவலரைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள கிராமத்திற்குச் சென்றுள்ளனர்.
இதன்போது ஒருசிலர் பிசிஆர் பரிசோதனை செய்ய சம்மதித்த நிலையில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட நிலையில் பிசிஆர் பரிசோதனை செய்ய இயலாமல் போனது.
பின்னர் கிராமம் 14 நாட்களுக்கு முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டது என்று மருத்துவர் கூறினார்.