காசா இருளில் மூழ்கும் அபாயம்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், காசா நகரம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசாவில் செயற்பட்டுவந்த ஒரே மின் உற்பத்தி நிலையத்தில் சில மணி நேரங்களில் எரிபொருள் தீர்ந்துவிடும் எனச் சொல்லப்பட்டிருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் நெருக்கடி
காசாவில் உள்ள அதிகாரிகள் கூறுகையில், "எரிபொருள் தீர்ந்து போனதால் சில மணிநேரங்களில் மின் உற்பத்தி நிலையம் முழுவதுமாக மூடப்பட்டு மின் விநியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.
மின் விநியோகம் சில பகுதிகளில் தடைப்பட்டிருப்பதால் காசா மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால், போரில் காயமடைந்தவர்களை காப்பாற்ற மருத்துவமனைகளில் மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்த பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல் திட்டம்
இந்த நிலையில், காசா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவம் அதிகமான துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை இஸ்ரேலில் 1,055-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 3,000 பேர் காயமடைந்துள்ளனர்.
காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; சுமார் 5,000 பேர் காயமடைந்துள்ளனர்.