குழந்தைகளை வன்முறைக்கு தூண்டும் ஹமாஸ் : இஸ்ரேல் குற்றச்சாட்டு
குழந்தைகளிடம் வன்முறையை தூண்டி விடும் வகையில் ஆயுதங்கள் மற்றும் வடிவமைக்கப்பட்ட விளையாட்டுகள் ஆகியவை ஹமாஸ் தளபதியின் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவிக்கின்றது.
அண்மையில், காசாவின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இஸ்ரேல் இராணுவத்தால் அதிரடி சோதனை நடத்தப்பட்டது, இதில், ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் .
அதனைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பின் தளபதி ஒருவரின் வீடு அருகே, எறிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிக்க கூடிய தோட்டாக்கள் மற்றும் கவச உடைகள் குவியலாக கிடைத்ததாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆயுதமேந்திய அரேபிய குழந்தைகள்
குழந்தைகளின் படுக்கையறையின் உள்ளே அந்த ஆயுதங்களில் சில காணப்பட்டன . பொம்மைகள் மற்றும் விளையாட்டு பொருட்களுக்கு அடுத்து அவை காணப்பட்டுள்ளன.
மேலும், இஸ்ரேல் மீது ஆயுதமேந்திய அரேபிய குழந்தைகள் தாக்குவது போன்ற விளையாட்டுகளும் இருந்தன என தெரிவித்து, அதுபற்றிய புகைப்படம் ஒன்றையும் படையினர் வெளியிட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு (2023) ஒக்டோபர் மாதம் 7-ந் திகதி ஹமாஸ் அமைப்பு கடுமையான தாக்குதலை தொடுத்தது.
ஆயிரக்கணக்கான வெடிகுண்டுகளையும் வீசி தாக்குதலில் ஈடுபட்டது, இதில் இஸ்ரேலை சேர்ந்த 1,200 பேர் பலியானதுடன், பலர் பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர்.
போர்நிறுத்த ஒப்பந்தம்
அதன்பின்னர், போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு, பிணைக் கைதிகளின் விடுவிப்பும் நடந்தது.
இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வீரர்கள் மற்றும் வெளிநாட்டினர் என 129 பேர் பிணைக் கைதிகளாக இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதாகவும், மற்றவர்களின் நிலை என்னவென்று தெரியாமலிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹமாசுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேலும் போரில் ஈடுபட்டு வருகிறது, இதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா தொடர்ந்தும் ஆயுதங்களை அளித்து வருகிறது.
காசாவில் இஸ்ரேல் இராணுவம் தரைவழியாகவும், வான்வழியாகவும் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிற நிலையில் காசாவில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரையில் பலியாகியுள்ளனர்.
போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டாலும், ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்ட இந்த செய்தி, பாரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |