காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் தான்..! ஐ.நா தூதர் குற்றச்சாட்டு
இஸ்ரேல் - பலஸ்தீனம் இடையே ஆண்டாண்டு காலமாக மோதல் நீடித்து வரும் சூழலில், பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 7 ஆம் திகதி பெரிய அளவில் போர் வெடித்தது.
இரு தரப்புக்கும் இடையில் ஏற்கனவே 5 முறை போர் ஏற்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் விட தற்போதைய போர் மிகவும் கொடூரமானதாக மாறி வருகிறது.
போரை உடனடியாக நிறுத்த இரு தரப்பையும் சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் நாளுக்கு நாள் போர் உக்கிரமடைந்து வருகிறது.
மருத்துவமனை மீது குண்டு வீச்சு
இந்நிலையில், காசாவில் உள்ள மீது ஆஸ்பத்திரி மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
காசா சிட்டியில் உள்ள அல்-அக்லி மருத்துவமனை மீது குண்டு வீசப்பட்டதில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் தாக்குதலுக்கு பயந்து தஞ்சம் அடைந்திருந்த பொதுமக்கள் என 500 பேர் கொன்று குவிக்கப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
மருத்துவமனை மீது இஸ்ரேல் போர் விமானம் குண்டு வீசியதாக காசா தரப்பில் கூறப்படும் நிலையில் இஸ்ரேல் அரசு அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மேலும், காசாவில் இருக்கும் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பு ஒன்று இஸ்ரேலை நோக்கி வீசிய ராக்கெட் குண்டு தவறுதலாக மருத்துவமனையில் விழுந்து வெடித்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேலிய ஆயுதங்கள் அல்ல
மேலும், மருத்துவமனை மீதான தாக்குதல் குறித்து ஹமாஸ் போராளிகள் இருவர் பேசிய காணொளி பதிவு ஒன்றை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
அதில் பேசும் ஹமாஸ் போராளிகள் மருத்துவமனை மீதான தாக்குதல் பயங்கரவாத அமைப்பின் தவறுதலான குண்டு வீச்சு என நம்புவதாகவும், கைப்பற்றப்பட்ட வெடிகுண்டின் சிதைவுகள் இஸ்ரேலிய ஆயுதங்கள் அல்ல எனவும் கூறுகின்றனர்.
இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காசா மருத்துவமனையை தாக்கியவர்கள் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அல்ல.
காசாவில் இருக்கும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதிகள் தான் என்பதை உலகம் அறியும். எங்கள் குழந்தைகளை கொடூரமாக கொன்றவர்கள், அவர்களின் குழந்தைகளையும் கொலை செய்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டை மறுத்த பலஸ்தீன அமைப்பு
ஆனால் இஸ்ரேலின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சம்பந்தப்பட்ட பலஸ்தீன அமைப்பு, “இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட காணொளி பொய்யானது.
இஸ்ரேல் கொடூரமான படுகொலைக்கான பொறுப்பிலிருந்து தப்பிக்க கடுமையாக முயற்சிக்கிறது” என சாடியது.
காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் என ஐ.நாவுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் தெரிவித்துள்ளார்.