இஸ்ரேல்–ஹமாஸ் இடையே உக்கிரமடையும் போர் : 24 மணிநேரத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலி
இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையேயான போரில் கடந்த 24 மணிநேரத்திற்குள் மாத்திரம் காசாவில் 207 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில் மிகப்பெரும் இழப்பை காசாவும், பலஸ்தீன மக்களும் சந்தித்துவருகின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
திட்டமிட்ட கொலை
இஸ்ரேலினால் நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதலினால் காசாவின் டெய்ர் எல்-பலா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தவிரவும் காசாவின் மேற்குக்கரையில் இஸ்ரேல் நடத்திவருகின்ற சோதனையில் மேலும் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவற்றுக்கிடையே இஸ்ரேல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மேலுமொரு பலஸ்தீனக் கைதியும் உயிரிழந்துள்ளார்.
இது திட்டமிட்ட கொலை என பலஸ்தீன அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 7 கைதிகள் இஸ்ரேல் சிறையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் கொலை
இவற்றை வைத்துப் பார்க்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 207 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளதாகவும் 338 பேரை காயப்பட்டிருப்பதாகவும் காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும், 2 மாதங்களுக்கு மேலாக தொடரும் இந்தப் பொட்டில், இதுவரை 21,978 பலஸ்தீன மக்களை இஸ்ரேல் கொலை செய்துள்ளதாகவும் காசாவின் சுகாதர அமைச்சு கூறியுள்ளது.
தவிரவும், 4,156 மாணவர்கள் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டதாகவும், 381 பள்ளிகளை இஸ்ரேல் அழித்துள்ளதாகவும் பலஸ்தீன கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |