உருக்குலையும் காசா: போரின் அடுத்தக் கட்டத்தை அறிவித்த இஸ்ரேல்
ஹமாஸ் படையினருடனான போரில் அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
கடந்த 15 நாட்களாக தொடர்ந்து முடிவு காணாமல் நடைபெற்று வரும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பிற்கு இடையிலான யுத்தத்தினால் இருதரப்பிலுமாக பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் பிற நாடுகளின் பொருளாதாரங்களும் பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 7 ஆம் திகதி ஹமாஸின் திடீர் தாக்குதலுக்கு பிறகு போர் பிரகடனத்தை அறிவித்து பதிலடி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், பலஸ்தீனத்தின் காசா நகரை ரொக்கெட்டுகள் மூலம் உருக்குலைத்து வருகிறது.
தற்காப்பு இராணுவ படை
இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில், ஹமாஸின் நான்கு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அத்தோடு, ஹமாஸ் அமைப்புடனான யுத்தம் மேலும் தொடரப் போவதாகவும், போரின் அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை பேசிய இஸ்ரேலிய இராணுவ படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, ஹமாஸ் படையினருக்கு எதிரான போருக்கு இஸ்ரேலிய தற்காப்பு இராணுவ படை தயாராகி வருவதாக கூறியுள்ளார்.
அத்துடன் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதும், சாத்தியமான அனைத்து வகைகளிலும் காணாமல் போனவர்களை கண்டறிவதையும் இஸ்ரேல் உளவுத்துறை மற்றும் இராணுவம் மேற்கொள்ளும் என ஹகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.