நாளை இடம்பெறவுள்ள தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மத்திய செயற்குழு கூட்டம் நாளை (18) திருகோணமலையில் (Trincomalee) நடைபெறவுள்ளது.
திருகோணமலையில் உள்ள சிவில் அமைப்பொன்றின் கேட்போர் கூடத்தில் நாளை காலை பத்து மணிக்கு கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.
தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் (C.V.K Sivagnanam) தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள்
இதன்போது, கட்சிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கை, இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) முன்னெடுத்து வரும் புதிய அரசியலமைப்பு விடயத்தினை தமிழ்க் கட்சிகள் கூட்டாக கையாளுதல் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் வகிபாகம் தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்படலாம் என்று அக்கட்சியின் நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |