தமிழரசுக்கட்சி ஒரு தவிர்க்க முடியாத சக்தி : கஜேந்திரகுமார் எம்.பி பகிரங்கம்
அநுர அரசாங்கத்தின் அரசியலமைப்பு எதிர்ப்பதற்கு தமிழரசுக்கட்சி (ITAK) ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”வடக்கு கிழக்கை பிரநிதித்துவப்படுத்தி 19 தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். 10 ஆசனங்களாவது அரசாங்கத்தின் ஏக்கியராஜ்ஜிய அரசியலமைப்பை எதிர்க்கின்ற நிலைமையை உருவாக்க வேண்டும்.
அந்த 10 ஆசனங்களை உருவாக்குவதற்கு தமிழரசுக்கட்சி ஒரு தவிர்க்க முடியாத சக்தி. செல்வம் அடைக்கலநாதனின் (Selvam Adaikalanathan) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் நாங்களும் சேர்ந்தால் அதனை உருவாக்க முடியும்.
அந்த அடிப்படையில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுடன் (S.Shritharan) இந்த விடயம் குறித்து முதற்கட்டமாக பேசியிருந்தேன்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் வாக்கு எண்ணும் மத்திய நிலையத்தில் இருந்த போது சிறீதரன் அரசியலமைப்பு விடயத்தில் எதிர்காலத்தில் நாங்கள் சேர்ந்து பயணிப்போம் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அதற்கமையவே நாங்கள் இந்த பேச்சுவார்த்தையினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்திருந்தோம். தற்போது தமிழரசுக் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சிறீதரன் இது பற்றி விரிவாக விளங்கப்படுத்தியதாக பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam) என்னிடம் தெரிவித்திருந்தார்.
அந்த அடிப்படையில் 7 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாகவும் அந்த குழு தான் இந்த விடயங்களை கையாளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம் அடைநாதனும் இந்த விடயத்திற்கு இணங்கியுள்ளதுடன் அவருடைய பங்காளிக் கட்சிகளுடன் பேசி முழுமையான இணக்கம் இருப்பதாக சாதாகமான முடிவை அறிவித்திருக்கின்றார்.
எந்த ஒரு தரப்பையும் தவிர்த்து விட்டுப் போனால் நாடாளுமன்றத்தில் 10 ஆசனத்தை உறுதிப்படுத்த முடியாது. நாங்களும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கின்ற நிலையில் எதிர்கால செயற்பாடுகள் தமிழரசுக் கட்சியின் கையில் தான் இருக்கின்றது.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)