யாழில் அநுர செல்லும் நிகழ்வுகளை புறக்கணித்த தமிழரசுக் கட்சி! சுமந்திரனின் அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என தமிழரசு கட்சி முடிவெடுத்துள்ளதாக , அக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(15.01) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்ட ரீதியாக சவால்
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பொங்கல் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றார். அந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு இலங்கை தமிழரசு கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என எமது கட்சி முடிவெடுத்துள்ளது.

இதற்கு பிரதான கரணம் "பிரஜா சக்தி" எனும் பெயரில் அரச இயந்திரங்களுக்கு சமாந்தரமாக தமது கட்சியை சார்ந்தவர்களை கொண்டு ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாம் பல எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளோம். உள்ளூராட்சி சபைகள் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்களை திசை மாற்றிக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் தமக்கு உள்ளூராட்சி அதிகாரங்கள் கிடைக்காத இடங்களில் இத்தகைய செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
சட்டரீதியாக உள்ளூராட்சி சபைகள் முன்னெடுக்க வேண்டிய வேலைகளை வறுமை ஒழிப்பு எனும் பெயரில் நேரடியாக மத்திய அரசு செய்வதனை சட்ட ரீதியாக சவாலுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
புதிய அமைப்பு
சுனாமி ஏற்பட்ட போது, வடக்கு கிழக்கில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து நிவாரண பணிகளை முன்னெடுக்க அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க முயன்ற போதே இதே ஜே.வி.பி யினர் தான் உயர் நீதிமன்றுக்கு சென்று அதற்கு எதிராக தடையுத்தரவை பெற்றனர்.

அதற்கு அவர்கள் நீதிமன்றில் முன்வைத்த வாதம் , அரச அமைப்புக்கு சமாந்தரமாக எந்தவொரு அமைப்பையும் செயற்பட அனுமதிக்க முடியாது என்பதே.
சுனாமியால் மிக மோசமாக பாதிப்படைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள் கட்டுமானம் செய்ய முடியாத செய்தவர்கள் அவர்கள், அதே சட்ட அடிப்படையில் இன்று அரசாங்க நிறுவனங்கள் , உள்ளூராட்சி சபைகள் ஊடாக சட்ட ரீதியாக செய்ய வேண்டியதை அதற்கு சமாந்தரமாக , தமது கட்சிக்காரர்களை உள்ளடக்கிய அமைப்பை உருவாக்கி அதன் ஊடாக செய்ய முயல்கின்றனர்.
அரச உதவிகள் , நிவாரணங்கள் , நிதிகளில் தங்களின் கட்சியை வளர்க்கின்றனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அவர்கள் பாவித்த அதே சட்ட கோட்டபாட்டை உபயோகித்து அதனை நிறுத்த முயற்சி எடுப்போம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முதல் கட்டமாக ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வை புறக்கணித்துள்ளோம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |