வேளமாலிகிதனுக்கு எதிராக தமிழரசுக்கட்சியின் அதிரடி நடவடிக்கை
இலங்கை தமிழரசுக்கட்சியினால் விளக்கம் கோரி தமக்கு அனுப்பப்பட்ட கடிதம் கிடைத்துள்ளதாக கரைச்சி பிரதேசசபை தவிசாளர் அறிவித்துள்ளார்.
இதற்கு, முன்னதாக, கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேளமாலிகிதனின் அண்மைய செயற்பாடு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, விளக்கக்கோரலை கேட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் (M. A. Sumanthiran), வேளமாலிகிதனுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆளுநரை சந்திக்கச் சென்ற விவகாரம்
வடக்கு மாகாண ஆளுநரை அண்மையில் சந்தித்திப்பதற்கு சென்றபோது, கட்சியிலிருந்து ஏலவே நீக்கப்பட்ட ஜீவராசா என்பவரை உடன் அழைத்துச் சென்றமை தொடர்பிலேயே, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேளமாலிகிதனிடம், விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஒரு வார காலத்திற்குள் விளக்கம் வழங்கப்பட வேண்டும் என அவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்சிக்கு எதிராக செயற்படும் ஒருவரை, ஆளுநரை சந்திக்க சென்ற உத்தியோகபூர்வ குழுவில் சேர்த்துக்கொண்ட குற்றத்துக்காக நீங்கள் ஏன் கட்சியில் இருந்து நீக்கப்படக்கூடாது? என்பதற்குக் காரணம் காட்டி, ஒருவாரத்திற்குள் எழுத்து மூலம் பதில் அனுப்ப வேண்டும் என அந்தக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்கு, திருப்திகரமான பதில் அளிக்காவிட்டால், கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவீர்கள் என தெரிவித்து, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளருக்கு தமிழரசுக் கட்சி கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
