வெளிநாட்டு சக்தியால் இயங்கும் யாழ்ப்பாணத்து கும்பல்? கிடுக்குப்பிடி விசாரணையில் இறங்கிய CID
கூர்மையான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்து இளைஞர்கள் ஐவரிடமும் CID விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும், கூர்மையான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சினால் பெறப்பட்ட 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவுக்கமைய கொழும்பு குற்ற விசாரணை பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தேசபந்து தென்னக்கோனுக்கு கிடைத்த தகவலின்படி, சந்தேக நபர்கள் ஐந்து பேரும் அத்தனகலையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கைது செய்யப்பட்டனர்.
குறித்த இளைஞர்கள், சில நாட்களுக்கு முன்பு முகமூடிகளை அணிந்து, மண்டை ஓட்டின் ஓவியங்களுடன், ஆயுதங்களை வைத்து பிறந்தநாள் நிகழ்வு ஒன்றை தொழிற்சாலையில் கொண்டாடியுள்ளமை தொடர்பில் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
கிடைத்த தகவலின் படி கொழும்பு குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஐந்து இளைஞர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, தொழிற்சாலையால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தனியார் அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் நான்கு கத்திகள் மற்றும் மண்டை ஓட்டின் படங்களுடன் ஒரு முகமூடி கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த விசாரணையில், தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கழிவறைக்கு பின்னால் இரண்டு வாள்கள் வாழை இலையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்கள் எந்த ஒரு நபரின் தலைமையிலான குற்றவியல் கும்பலுடன் தொடர்புள்ளவர்களா என்பதை அறிய இந்த விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
மேலும் இந்த கும்பல் வெளிநாட்டில் உள்ள ஒருவரால் வழிநடத்தப்படுகிறார்களா என்பதை அறியவும் பல கோணங்களில் விசாரிப்பதாக காவல்துறை அதிகாரி கூறினார்.