யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024 வர்த்தக கண்காட்சி இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணத் (Jaffna) தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று (23) ஆரம்பமான இந்த கண்காட்சி நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) வரை நடைபெற உள்ளது.
இதேவேளை இக் கண்காட்சியினை முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்புகள் மற்றும் சேவைகள்
இந்தக் கண்காட்சியானது கட்டுமானம் மற்றும் பிற தொழில் துறைகளில் பங்காளர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த ஒரு தளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் தெற்கு வர்த்தக இணைப்புகளை வலுப்படுத்தும் இந்த கண்காட்சியில் கட்டுமானம் சார் இயந்திரங்கள், உபகரணங்கள், விவசாயம் சார் உபகரணங்கள், மின் உபகரணங்கள், கைவினைப்பொருட்கள், பீங்கான் மற்றும் கண்ணாடிப் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், சுகாதாரம், உணவு மற்றும் உடைகள் போன்ற பல துறைகளில் உள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இன்றைய நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். இந்திய துணைதூதரக அதிகாரி ராஜேஷ் பேனகார், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரணவன், நிகழ்வின் ஊடக இணைப்பாளர் ஜெயரஞ்சன் யோகராஜ் ஆகியோர் அதிதியாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |