தனியார் காணிகளை அரசுடமையாக்கும் தவிசாளரின் தீர்மானம்- கடும் கண்டனம் வெளியிட்டுள்ள உறுப்பினர்!
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரின் செயற்பாடுகளை தான் வன்மையாக கண்டிப்பதாக நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் கு.மதுசுதன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், நல்லூர் பிரதேச எல்லைக்குள் பராமரிப்பற்ற காணிகள் சபை உடைமையாக்கப்படும் என்ற அறிவித்தலை சபை தவிசாளர் ப.மயூரன் அறிவித்தல் விடுத்துள்ளதாக நேற்றைய தினம் ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
உண்மையில் சபை கூட்டப்பட்டு பிரதேசத்தில் பராமரிப்பற்ற காணிகள் தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் பேற்கொள்ளப்படவில்லை என்பதோடு, எந்தவித தீர்மானங்களும் எட்டாமல் எமது மக்களின் காணிகள் அரசுடமையாக்கப்படும் என்ற அறிவித்தலை விடுத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இவ்வறிவித்தலினால் மக்கள் அதிக சினம் கொண்டு எம்மிடம் தெரிவிக்கிறார்கள். கொரோனா பரவலாலும், அடைமழை காரணமாகவும், வருமானமற்ற நிலையாலுமே துப்பரவு பணிகள் இடம்பெறவில்லை எனவும், சபை ஊழியர்களால் தங்களுக்கு உரிய அறிவித்தல் வழங்கப்படவில்லை எனவும் தெரிக்கிறார்கள்.
எனினும் பிரதேசத்தில் பராமரிப்பற்ற காணிகளினால் பாரதினியம், மற்றும் டெங்கு அபாயங்கள் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றாகும்.
அதனை தடுப்பதற்கும் உரிய முறையில் பராமரிப்பதற்கும் பிரதேச சபை சட்ட ஏற்பாட்டுகளின் படி பல முறைகள் உள்ளன .
எம்மிடம் அதிகாராங்கள் உள்ளன. எமது சபை மூலம் சிகப்பு எச்சரிக்கை விடுத்தல், தண்டம் அறவிடல் போன்ற செயற்பாடுகள் அல்லது நீதிமன்றதினூடான நடவடிக்கைகள் போன்றன காணப்படுகின்றன.
அத்தோடு உள்ளூராட்சி மன்ற காணி கையாளல் சம்மந்தமான அதிகாரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
காணி உடமையாளர்களின் காணிகளை உரிய முறையில் பராமரிக்க பண்ணுவதற்கு எமது சபையிடம் போதிய வரம்புகளும், சக்திகளும், ஏதுக்களும் இருக்கும் போது அதை தவிசாளருக்குரிய அதிகாரத்தினை பயன்படுத்தி அமுல்படுத்தாமல் எமது தமிழ் மக்களின் காணிகளினை அரச உடைமையாக்கபப்டும் என்று அறிவித்தமையானது, எமது நிலங்களை அரசுக்கு தாரைவார்க்கும் செயற்பாடாகும்.
ஏற்கனவே பல திணைக்களங்கள் மூலம் எமது தமிழர் நிலங்கள் கபளீகரம் செய்யப்படும் தறுவாயில் அதற்கான எதிர்ப்புக்களும் கோசங்களும் எம்மிடையே வலுப்பெற்று வரும் இந்நாட்களில் எமது தமிழர் காணிகள் அரசுடமையாக்கப்படும் எனறு விடுத்த அறிவிப்பானது இன்னும் பேரினவாதத்திற்கு தூபம் போடும், அவர்களை ஊக்குவிக்கும் செயலாகும்.
இதை அரசே இனி செயற்படுத்த வழி வகை செய்வதாக அமைந்துவிடும். இதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
பிரதேசத்தில் காணி விற்றல், வாங்கல் மூலம் சபைக்கு அதிக வருமானம் கிடைகிறது.
அந்த வருமானங்களை கொண்டு பராமரிப்பற்ற காணிகளினை பராமரிக்க சில முன்மாதிரியான நடவடிக்கைகளினை நாம் எடுக்க வேண்டும்.
இருக்கும் அதிகாரங்களை சிறப்பாக பயன்படுத்தி மக்கள் சேவையாற்ற வேண்டுமே ஒழிய மக்கள் வரிப்பணத்தில் சபை நடத்திக்கொண்டு அவர்களுக்கு எதிராக நாம் செயற்படுவது சிறப்பான ஒன்றல்ல.
எனவே மக்கள் விரோத நிலைபாடுகளை எடுக்காமல் இனி சபையில் கூடி கலந்துரையாடி ஆக்கபூர்வமான இனத்திற்கு நலன் சேர்க்கும் பிரதேசத்தின் வளர்ச்சிக்குமுரிய நடவடிக்கைகளினை மேற்கொள்ளாமல் இப்படி செயற்படுவதனை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.