வட்டுக்கோட்டையில் அடித்து கொல்லப்பட்ட இளைஞன்: வெளியானது காவல்துறையின் அறிக்கை
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைக் காவல் நிலையத்தில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனும் மற்றுமொரு சந்தேக நபரும் ஒரு வீட்டில் இருந்து 90,000 ரூபாய் பணம் மற்றும் 16 ½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கடந்த நவம்பர் 11ஆம் திகதி நாககேணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரேதப் பரிசோதனை
மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் சிறையில் இருந்தபோது திடீரென சுகவீனமடைந்து சிகிச்சை பெற்று மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், மீண்டும் நோய்வாய்ப்பட்டு நவம்பர் 19ஆம் திகதி யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேதப் பரிசோதனைபடி குறித்த இளைஞன் தாக்குதலுக்கு உள்ளாகி சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் ஆரம்பம்
பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் யாழ்ப்பாண காவல்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதனை தொடர்ந்து தவறிழைத்த காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த இளைஞன் உயிரிழந்தது தொடர்பில் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி சிறைச்சாலைக்கு நேரில் சென்று சிறைச்சாலை அத்தியட்சகர் , உத்தியோகஸ்தர்கள் , உள்ளிட்டவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபரிடம் மேலும் வாக்கு மூலங்களை பெற்றுக்கொள்ள எதிர்வரும் 24 ம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி வி.திருக்குமரன், சட்டத்தரணி ரிஷிகேஷவன், மற்றும் சட்டத்தரணி மயூரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 1 மணி நேரம் முன்
