யாழ் நகரில் பதற்றத்தை ஏற்படுத்திய போராட்டம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்! !
இரண்டாம் இணைப்பு
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கனகரட்ணம் சுகாஸ் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
சிறிலங்காவின் சுதந்திர தின விழா மீண்டும் இன்றைய தினம் யாழில் இடம்பெறுவதால், அதனை எதிர்த்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஊடகப்பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் ஆகியோர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படடுள்ளது.
கைது

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் வென்றெடுக்கப்படும் வரை சிறிலங்காவின் சுதந்திர தினம், தமிழர் தாயக மக்களுக்கு கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகப் பகுதியில் கடந்த 4 ஆம் திகதி வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய போராட்டம் தொடர்ச்சியாக 4 நாட்களாக முன்னெடுக்கப்பட்டது.
அதனையடுத்து சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது தடவையாக சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
காவல்துறை குவிப்பு

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யாழ் நகரப் பகுதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. அதேவேளை இன்று நண்பகல் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில், அங்கும் பெருமளவில் காவல்துறையினர் வீதியை மறித்து களமிறக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவும் வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த விண்ணப்பத்துக்கு அமைய இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் நீதிமன்றின் தடை உத்தரவையும் மீறி மாணவர்கள், சமூக அமைப்புக்கள் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகியோர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.










