யாழில் பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடி சோதனை: இரண்டு வெதுப்பகங்களுக்கு சீல்
யாழ்ப்பாணம் (Jaffna) பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் நல்லூர் (Nallur) பகுதியில் இரண்டு வெதுப்பகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட 09 வெதுப்பகங்கள் திடீர் பரிசோதனைக்கு கடந்த 12ம் திகதி இரவு உட்படுத்தப்பட்டு இருந்தன.
இதன்போது கொக்குவில் (Kokkuvil) பகுதியில் சுகாதார சீர்கேடாக இயங்கிய 02 வெதுப்பகங்கள் இனங்காணப்பட்ட நிலையில், இரண்டு வெதுப்பகங்களிற்கும் எதிராக கொக்குவில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் (P. Sanjivan) இன்று (24) யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
பொது சுகாதார பரிசோதகர்
வழக்குகளினை விசாரித்த நீதவான் A. A. ஆனந்தராஜா (A. A. Anandaraja) ஒரு வெதுப்பகத்தினை சீல் வைத்து மூடுமாறும், மற்றைய உணவகத்தினை திருத்த வேலைகளை உடன் மேற்கொள்ளுமாறும் பணித்து வழக்குகளினை எதிர்வரும் 03 ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதுடன் உரிமையாளர்களை தலா ஒரு இலட்சம் ஆட்பிணையில் விடுவித்தார்
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் தொடர்ச்சியாக உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |