யாழில் ஒரு கடை திறப்பு விழாவிடம் தோற்றுப்போன தமிழர்களின் உரிமைப் போராட்டம்...!
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் தனியார் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டமொன்று மூன்றாம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
இந்தநிலையில், தையிட்டி விகாரை ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒருபுறம் போராட்டம் நடக்க அதே நேரத்தில் ஒரு கடைத் திறப்பு விழாவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது தமிழ்ச் சமூகத்தின் தற்போதைய அரசியல் வீழ்ச்சியை அப்பட்டமாகக் காட்டுகின்றது.
நிலம் என்பது ஒரு இனத்தின் உயிர்நாடி.
அந்த நிலம் பறிபோகும் போது வீதிக்கு வராத மக்கள், ஒரு வணிக நிறுவனத்தின் கவர்ச்சிகரமான விளம்பரங்களுக்குப் பின்னால் ஓடுவது ஒரு தேசிய இனத்தின் தோய்ந்த அடிமைத்தனத்தையே காட்டுகின்றது.
மக்களை வெறும் வாக்கு இயந்திரங்களாக மட்டும் பார்க்கும் அரசியல்வாதிகள், போராட்டங்களை ஒரு சடங்காக மாற்றிவிட்டனர்.
தலைமைகளின் மீதான நம்பிக்கையீனம் ஒருபுறம் இருந்தாலும் சொந்த நிலம் பறி போவதை விட ஒரு கடை திறப்பு விழா முக்கியமெனக் கருதும் மக்களின் மனநிலை பாரதூரமானது.
இந்த சம்பவம் எதிரியின் ஆக்கிரமிப்பை விட நம் இனத்தின் உணர்ச்சியற்ற நிலையைத் தான் உரக்கச் சொல்கின்றது என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
பெரும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட தையிட்டிப் போராட்டம், எவ்விதச் சலனமுமின்றி ஒரு சாதாரண நிகழ்வாக முடிவுக்கு வந்திருப்பது பெரும் கவலையளிக்கின்றது.
நில ஆக்கிரமிப்பு என்ற பாரிய அச்சுறுத்தலை விட ஒரு சாதாரண கடைத் திறப்பு விழா மக்களைப் பெருமளவில் ஈர்த்திருப்பது ஒரு தேசிய இனமாக நாம் எவ்வளவு தூரம் உணர்விழந்து போயுள்ளோம் என்பதையே காட்டுகின்றது.
உரிமைப் போராட்டங்களை வெறும் சடங்காக மாற்றிய அரசியல் தலைமைகளும், வாழ்வாதாரப் போராட்டத்தை வேடிக்கையாகக் கருதும் மக்களும் இருக்கும் வரை ஆக்கிரமிப்புகள் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே மாறும்.
இது வெறும் போராட்டத்தின் தோல்வியல்ல தமிழ் மக்களின் கூட்டு மனசாட்சி அடைந்திருக்கும் பாரிய சரிவாகும்.
இது தொடர்பிலும் அண்மைய அரசியல் களம் தொடர்பிலும் விரிவாக ஆராய்கின்றது இன்றைய லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |