யாழ் பாடசாலையொன்றின் இல்ல அலங்கரிப்பு விவகாரம்: விசாரணை தொடர்பில் வெளிவந்த தகவல்
யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டி இல்ல அலங்காரத்தில் காந்தள் பூவையே அலங்கரித்தோம் எனவும் கார்த்திகை பூ என்று எமக்கு தெரியாது என காவல்துறையினருக்கு மாணவர்கள் பதிலளித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியில் கார்த்திகைப் பூ மற்றும் கவச வாகனத்தை ஒத்த அலங்காரங்கள் நேற்று முன்தினம் (30) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெல்லிப்பழை காவல்துறையினர் சில மாணவர்களையும் ஆசிரியர்களையும் நேற்று(31) விசாரணைக்காக காவல் நிலையம் வருமாறு அழைத்தனர்.
காவல்துறையினரின் விசாரணை
காவல்துறையினரின் விசாரணையில் நீங்கள் இல்ல அலங்காரம் செய்தது கார்த்திகைப் பூவைத் தானே இதற்கான ஆலோசனைகளை ஆசிரியர்கள் தானே வழங்கினார்கள் என கேள்வி எழுப்பினார்.
இதன் போது பதில் வழங்கிய மாணவர்கள் நீங்கள் கூறுவதைப் போல குறித்த பூ கார்த்திகைப் பூ என நாங்கள் அறிந்திருக்கவில்லை. காந்தள் மலர் என அறிந்துள்ளோம் எமது பாடப்புத்தகத்தில் அவ்வாறே உள்ளது.
அது மட்டுமல்லாது வருடத்தில் ஒரு முறை பூக்கும் அரிய மலர் அதனை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே காட்சிப்படுத்தினோம். இதன்போது குறுக்கிட்ட காவல்துறையினர் உங்கள் இல்ல அலங்காரத்திற்கான ஆலோசனையை ஆசிரியர்கள் தானே வழங்கினார்கள் எனக் கேள்வியெழுப்பினார்.
மாணவர்களின் பதில்
இதன்போது பதிலளித்த மாணவர்கள் ஆசிரியர்களும் காந்தள் பூ இல்ல அலங்காரத்திற்கும் தொடர்பு இல்லை நாங்கள் இவ்வாறு அமைக்கப் போகிறோம் என அவர்களுக்கு தெரியப்படுத்தவும் இல்லை - என்றனர்.
இதன் போது பல்வேறு வழிகளில் குறித்த இல்ல அலங்காரத்திற்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் முடிச்சுப் போட காவல்துறையினர் முனைந்த நிலையிலும் மாணவர்கள் குறித்த பதிலை மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாடசாலை அதிபரும் காவல் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்ட நிலையில் தனது வாக்குமூலத்தில் ஏற்கனவே இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான பாடசாலை ஆசிரியர்கள் கூட்டத்தில் தெளிவாக கூறினேன்.
ஏற்கனவே கிளிநொச்சியில் இடம்பெற்ற இல்ல அலங்காரம் தொடர்பில் எழுந்த சர்ச்சை தொடர்பில் கூட்டத்தில் தெரிவித்தேன். இவ்வாறான அலங்காரம் தொடர்பில் தானும் அறிந்திருக்கவில்லை என வாக்குமூலத்தில் தெரிவித்தார் என அறிய முடிகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |